|
|
சில நாட்களுக்கு முன் சென்னை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி தமிழ்த்துறையிலிருந்து ஒரு அழைப்பு. அந்த கல்லூரி எங்கே இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. அழைத்த முனைவர், வரும் வியாழக்கிழமை கணித்தமிழும் பயன்பாடும் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்துகிறோம். உங்கள் நண்பரும் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான திரு.மா.ஆண்டோ பீட்டர் பேசுகிறார், நீங்களும் பேச வேண்டும் என்றார்கள். நம்மையும் ஒரு கல்லூரியில் அழைக்கிறார்களே அவர்களை ஏமாற்றக்கூடாது என்பதால் சரி என்று சொன்னேன்.
அங்கே போனவுடன் தேனீர் அருந்தும் போது தான் புரிந்தது, இது பிரபலமான சென்னை எ.எம்.ஜெயின் கல்லூரி என்று, அசடுவழியாமல் முன்பே தெரிந்ததுப் போல் சமாளித்துவிட்டேன். சென்னைவாசியான நமக்கு சமாளிக்கவும் உதார்வுடவுமா சொல்லித்தர வேண்டும்!.

கருத்தரங்கிற்கு கல்லூரியின் புலத்தலைவர் (Dean) முனைவர்.ஜி.கே. பிரான்சிஸ் தலைமை வகித்தார். திரு.மா.ஆண்டோ பீட்டர் ‘கணினியும் தமிழும்’ என்ற தலைப்பிலும், நான் ‘கணித்தமிழ் வழி வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை ஆலோசகர் முனைவர். இரா.இராசேந்திரன் ‘இணையத்தமிழ் வளர்ச்சி’ என்ற தலைப்பிலும் பேசினர்.


என் பேச்சு மாணவர்களுக்கு ஆர்வமாகவும் அதே சமயம் பயனாவும் இருக்க வேண்டும் (அச்சத்தில்) என்பதால் மொழியில் தேர்ச்சியடைவதால் பயன்கள், அதனால் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப்பற்றி சுருக்கமாக சொன்னேன். இன்று எல்லாத்துறையிலும் கணினித்திறமை எப்படி அவசியமோ, அதுப்போலவே தான் மொழியில் தேர்ச்சியும் அவசியம், குறிப்பாக அரசுத்துறையில், ஊடகங்களிலும், தொலைத் தொடர்பு நிறுவனகளிலும், விளம்பரத்துறையிலும், நுகர்வு பொருள்கள் விற்பனைச் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களிலும் (FMCG) வேலைகள் கிடைக்கும். தமிழ் தெரிந்தால் இங்கேல்லாம் தமிழ் எழுத்தாளர் வேலை தான் கிடைக்கும் என்றில்லை அது உங்களை தனித்து அடையாளம்காட்ட உதவும், அது தான் நம் வளர்ச்சிக்கு முக்கியம். இன்று குறைந்தளவு ஆங்கில அறிவு கட்டாயம் தேவை, இன்னும் ஒரு பத்தாண்டுகளில் சீனா மொழியும் கூட தேவைப்படலாம், ஆனால் என்றும் ஒரு அளவிற்கு மேல் நம்மை எடுத்துச் செல்ல தாய் மொழி தான் உதவும் என் சொன்னேன்.

பொறுமையாக கேட்ட மாணவர்களுக்கும், என்னை அழைத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் என் நன்றிகள்.

ஜார்ஜ் ஆர்வெல் 17 ஆகஸ்ட் 1945ல் வெளியிட்ட நூல் “அனிமல் ஃபார்ம்” (Animal Farm). 66 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் பி.வி.ராமஸ்வாமி மொழி பெயர்த்திருக்கிறார், கிழக்கு பதிப்பகத்தின் 2012ஆம் ஆண்டு வெளியீடு. நண்பர் பத்ரியின் வலையில் படித்துவிட்டு நேற்று தான் வாங்கினேன், கையில் எடுத்ததிலிருந்து படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை, அவ்வளவு சுவையாக இருந்தது. சில புத்தங்களை ஏன் மொழிப் பெயர்ப்பை படித்தோம் என்று எண்ண வைக்கும், வெகு சில தான் நம் நல்ல காலம் தாய் மொழி தமிழில் படித்தோம் என்று தோன்றும். அப்படி எனக்குப்பட்டதில் இது இரண்டாவது புத்தகம் (முதலாவது: சீனா).
விலங்குப் பண்ணை புத்தகம் -சிரித்து, சிந்தித்து, சிரித்து என உணர்ச்சிகள் மாறி மாறி வரவழைத்தது. வேறும் 140 பக்கங்களில் (ஆங்கிலப் பதிப்புக்கூட இதே அளவு தான்) ஒரு முழு கதையும், அதுவும் ரஷ்ய ஸ்டாலினிசத்தை நையாண்டி செய்துக் கொண்டே எழுதுவதென்பது ஒரு சிறந்த எழுத்தாளாரால் மட்டுமே முடியும் அதை தெளிவாகச் செய்துள்ளார் ஜார்ஜ் ஆர்வெல்.
மிக உயர்ந்த நோக்கத்தில் ஆரம்பிக்கப்படும் புரட்சிகள் கூட எப்படி சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் உருமாரி, சிதைந்துவிடுகிறது என்பதற்கு அனிமல் ஃபார்ம் ஒரு சிறந்த கையேடு. போன வருடம் நடந்த அரப் ஸ்பிரிங்க் இதன் இன்றைய கால அடையாளம். சர்வாதிகாரத்தின் கொடிய முகத்தை ஆசிரியர் உன்னிப்பாக சொன்னாலும், விலங்குகளை வைத்து கதைச் சொல்லி சொல்வதால் நமக்கு எளிதாகப் புரிகிறது. ரஷ்ய ஸ்டாலினை நெப்போலியன் என்கிற பன்றியும், ட்ராட்ஸ்கியை ஸ்நோபால் என்கிற பன்றியும், லெனினை ஓல்ட் மேஜர் என்கிற வெள்ளைப் பன்றியும் அப்படியே இயல்பாக நம் கண்முன்னார் கொண்டுவருகிறது.

இந்தப் படத்தை தமிழ் கூறும் நல் உலகில் கடைசியாகப் பார்த்தது நான் தான் போல, படம் பொங்கலுக்கு கலைஞர் டிவியில் கூட வந்துவிட்டது. இந்த வாரம் எங்கள் கிளப்பில் வேலாயுதம் என்று சொல்லிவிட்டு இதைப் போட்டார்கள்.
”கோ”வில் ஜீவா சண்டைக்காட்சிகளை பொளந்துக்கட்டுகிறார், பாராட்டுக்கள். நான் முக்காலியை வைத்து படம் எடுத்தால் கூட கோனலாகத் தான் வருகிறது, மனுஷன் ஒருகையில் ஏன் இருவிரலில் எடுக்கும் படங்கள்கூட சரியாக வருகிறது, நம்ம ஊர் 3ஜியில் மின் அஞ்சலே கஷ்டம் ஆனால் ஜீவா முழுஅளவு படங்களாக அனுப்பித் தள்ளுகிறார். கார்த்திகா ராதாவை நினைவுப்படுத்துவதோடு நின்று விடுகிறார், நடிப்பு முகபாவம் எதுவுமில்லை, அடுத்தப் படத்தில் பார்க்கலாம். வில்லன் வசந்தன் பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார் அஜ்மல் அமீர், சில கோனங்களில் இயக்குனர் திரு.வாசுவின் மகன் ஷக்தியைப் போல இருக்கிறார்.
முடிவில் எனக்கு உடன்பாடுயில்லை. என்ன காரணம் சொன்னாலும் பாத்திரிகைகள் உண்மையை மக்களுக்குச் சொல்லத்தான் வேண்டும்.

இன்று நான் கற்றது, எண்ணெய் பெயர் விளக்கம்.
எனக்கு தெரிந்தது: நல்லெண்ணெய் = நல்ல + எண்ணெய்
இன்று கேட்டது: எள்ளு + நெய் = எண்ணெய்
எண்ணெய் என்றால் லிப்போ பேராகராதி சொல்கிறது (கீழே):
எண்ணெய் : (1) எள்ளைப் பிழிந்து எடுக்கும் நெய் gingili oil; (2) எல்லாவகை நெய்க்கும் பொதுப் பெயர் a general name for all kinds of oil.
இன்று கணித்தமிழ் சங்கம் தனது மாதக்கூட்டத்தை எங்கள் அலுவலகத்தில் (விஷ்வக் ஸொல்யுஷண்ஸில்) நடத்தியது. கூட்டத்தில் தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினரும், மாஃபாய் நிறுவனருமான திரு.கே.பாண்டியராஜன் சிறப்புரையாற்றினார். தமிழக மாணவர்களிடம் கணினி தேர்ச்சியின் அவசியத்தை சிறப்பாக எடுத்துரைத்தார். உறுப்பினரின் பலப்பல கேள்விகளுக்கு அழகாகவும் பொறுமையோடும் பதிலளித்தார். அவருக்கு நன்றிகள்.
_1.jpg)
_1.jpg)
சிவா நடித்த “வ குவாட்டர் கட்டிங்” படம் இன்று பார்த்தேன். சிவாவின் முந்தைய “தமிழ் படம்” எனக்கு பிடித்திருந்ததால் இந்தப் படத்திலும் நிறைய காமெடி, கிண்டல்கள் எதிர்ப்பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மிகச் சுமார், படம் முழுக்க ஒரே ராத்திரியில் நடக்கும் கதையில் ஏகப்பட்ட குழப்பம்-படு மொக்கையாக படம் போகிறது. கதையே இல்லாமல், படப்பிடிப்பு நடக்கும் தினங்களில் காலை எழுந்தவுடன் நினைத்துக் கொண்டு ஒவ்வொரு காட்சியும் எடுக்கப்பட்டதுப் போல் ஒரு எண்ணம் நமக்கு தோன்றுகிறது.இரண்டாவது பாதியில் இதற்கு மேல் எப்படி சோதப்புவார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பில் நம்மை கடைசிவரைப் பார்க்க வைக்கிறது!

படத்தைப் பற்றி இதற்கு மேல் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை, மேலும் தெரிந்தக் கொள்ள விரும்பினால் கேபிள் சங்கர் என்பவரின் இந்த வலைப்பதிவைப் பார்க்கலாம்.
கடந்த 50 ஆண்டுகளாய் தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தை உருவாக்கி, பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திலுள்ள ஒரு சக்தி தி.மு.க.. 70களில் பிறந்த என் தலைமுறைக்கு தி.மு.க.வை அட்சியாளர்களாகவும் ஒரு அரசியல் கட்சியுமாகத் தான் தெரியும். ஒரு சமுக இயக்கமான திராவிட கழகத்தில் இருந்து அது எப்படி ஒருவானது என்று ஆழமாகத் தெரியாது.
சென்றாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் மலர்மன்னன் எழுதிய “தி.மு.க உருவானது ஏன்?” அதைச் சுறுக்கமாக (159 பக்கங்கள்) விளக்குகிறது. இந்தாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்குக் கடையில் இதைப் பார்த்ததும் நினைவுவந்து கடந்தச் சில நாட்களில் படித்து முடித்தேன். பல விசயங்களை எழுதாமல் தலைப்பில் உள்ள ஒரு கேள்வி ”தி.மு.க உருவானது ஏன்?” அதற்கு ஆசிரியர் சொல்லவரும் மூன்று காரணங்களை மட்டுமே எழுதியுள்ளார், அதற்கு பாராட்டுக்கள். அந்த மூன்று காரணங்கள் – கருப்புச் சட்டை அணிவது, ஆகஸ்டு 15ஐ கொண்டாடுவது, மணியம்மை திருமணம்.

இரா.முருகனின் அரசூர் வம்சம்
இரா.முருகனின் இரண்டு புத்தகங்களையும் (மூன்று விரல், லண்டன் டயரி) படித்து, அவர் வசனம் எழுதியத் திரைப்படத்தையும் (உன்னைப் போல் ஒருவன்) பார்த்து அவரின் எழுதிற்கு நான் ஒரு ரசிகனாகிவிட்டேன். அதனால் தேடி வாங்கிய அவரின் முந்தைய நாவல் தான் இந்த ”அரசூர் வம்சம்”. இந்த நாவல் திண்ணை இணையத்தளத்தில் தொடராக வந்தது என்று அறிகிறேன்.
சுமார் நூறு/நூற்றியம்பது ஆண்டுகளுக்கு முன் அரசூர் என்ற சிறு ஊரில் நடக்கும் கற்பனைக் கதை. அந்த ஊரில் உள்ள புகையிலை விற்கும் சுப்பிரமணிய அய்யரின் விட்டையும், அருகில் இருக்கும் செல்வாக்கிழந்த ஜமின்தார் அரண்மனையும் சுற்றி வரும் கதை. இதை தவிர மலையாளத் தேசத்தில் அம்பலப்புழையில் உள்ள கரண்டி பிடிக்கும் குடும்பம், சென்னைப்பட்டினத்தில் வைத்தி சார் விடு இவர்களையும் சேர்த்துக் கொண்டுச் செல்கிறது கதை. இதற்கு நடுவில் சுப்பம்மாள் கிழவி, அடிக்கடி வந்து போகும் மூத்தக்குடிப் பெண்கள், இறந்தும் ராஜாவைப் படுத்தும் புஸ்தி மீசைக் கிழவன், பின் காலத்திலிருந்து மனத்தில் நினைத்தமாத்திரத்தில் ஆஸ்டின் காரில் வந்துப் போகும் பனியன் சகோதரர்கள் அவர்கள் கொண்டு வரும் ஒப்பாரி பாடல்கள் பாடும் பழுக்காத்தட்டு பாட்டுப் பெட்டி என்று ஆழமான கதாப்பாத்திரங்கள் . இவர்களைத் தவிர பல்லாங்குழிப் பலகையில் சோழிகளை உருட்டி யந்திரம் செய்துக் கொடுக்கும் அரண்மனை ஜோசியர் அண்ணாசாமி அய்யங்கார், சாவக்காட்டு கிறிஸ்தியானி பிராமண கிழவன், அவர்களின் நீள அங்கி அணிந்த தோமையன், கொட்டக்குடித் தாசி, தஸ்தகீர் ராவுத்தரின் பையன் சுலைமான், பிஷாரடி வைத்தியர் என்று பலப்பல நபர்கள் வந்துப் போனாலும் ஆசிரியரின் தெளிவான காட்சியமைப்பால் எல்லோரையும் நம் கண்முன் நிறுத்துகிறார். பல ஊர்கள், நான்கைந்து கலாச்சாரங்கள், இரண்டு மூன்று தலைமுறைகாரர்கள் என்று கதைச் சென்றாலும் கொஞ்சம் கூடத் தொய்வில்லை.
என்னைப் பொருத்தவரை இந்த நாவலின் சிறப்பே அதன் ஆழமான கதாப்பாத்திரங்களும், தெளிவான காட்சிகளும் தான், அதனால் ஒரு வரிக்கூட விடாமல் படிக்க வேண்டி இருந்தது. சில பக்கங்களை நான் இரண்டு/மூன்று முறைக்கூடப் படித்தேன், அப்படி படித்து உள்வாங்கிக் கொள்ளவில்லை என்றால் நாம் எதையோ விட்டுவிடுவதுப் போல் தோன்றுகிறது. ஆசிரியர் நிஜமாகவே எல்லா இடத்திலும் இருந்துக் கேட்டு எழுதியதுப் போல உள்ளது வசனங்கள் – அது பிரமாணர்களின் தமிழ் ஆகட்டும், மலையாளம் ஆகட்டும், முன்னோர்கள் சொல்லும் சமஸ்கிரத பாடல்கள் ஆகட்டும், கப்பலில் வரும் அமொரிக்கர் பேசும் ஆங்கிலமாகட்டும், கிறிஸ்தியானிகள் பேச்சாகட்டும் ஒருவரால் எப்படி இவ்வளவு நடைகளைச் சுலபமாக எழுதமுடிகிறது?.
470 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலைப் படிக்க பிடிக்கும் என்றால் படிக்க வேண்டிய புத்தகம். தமிழில் இது ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
இணையத்தில் தேடியதில் இந்த நாவலை பற்றிய வேறு சிலரின் வலைப்பதிவுகள் – நினைவுத்தடங்கள், யுவகிருஷ்ணா
இன்று வெளிவந்த தீக்கதிர் நாளிதழில் நான் எழுதிய கட்டுரையொன்று பிரசுரமாகியிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுத என்னை ஊக்குவித்த திரு.டி.கெ.ரங்கராஜன், எம்.பி. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கட்டுரை முழுவதுமாகவும், நாளிதழில் இருந்து வருடிய PDF பிரதியும் இங்கே.
கணினி உலகிலும் இன்று சீனா தான் “சூப்பர்”!

சூப்பர் ஸ்டார் என்றால் நமக்கெல்லாம் தெரியும், அது என்னது சூப்பர்-கம்ப்யூட்டர்? எந்திரன் படத்தில் ‘சிட்டி’ ரோபோ அதன் பல அடிமை ரோபோக்களை எல்லாம் ஒருங்கிணைத்து கட்டுப்படுத்த அதற்குத் தேவையாகயிருந்த கணினியைப் போல பல ஆயிரம் மடங்கு கணிக்கும் திறன் கொண்டது தான் “சூப்பர்-கம்ப்யூட்டர்”. இது நம் மடிகணினியைப் போன்று சிறியது அல்ல, மிகப் பெரியது, குளிர்படுத்தப்பட்ட பல ஆயிரம் சதுர அடி இடத்தில் பல நூறு நபர்கள் இயக்கும் ஒன்று. பொதுவாக மிகக்கடினமான அறிவியல், வானவியல், அணுவியல் ஆராய்ச்சிகளுக்கு ஒரு நொடியில் பல கோடான கோடி கணக்குகளுக்கு விடையறியும் திறன் வேண்டும், இதை செய்வது தான் ஒரு சூப்பர்-கம்ப்யூட்டர்.
சூப்பர்-கம்ப்யூட்டர்களை நம் தெருக்கோடியில் இருக்கும் மின்-சாதன கடையில் போய், கடன் அட்டையைக் காட்டியெல்லாம் சுலபமாக வாங்க முடியாது. அதைப் பெறப் பல ஆயிரம் பொறியியல் வல்லுநர்கள், பல ஆண்டுகள் கடினமாக உழைத்து தயாரிக்க வேண்டும். அதற்கு சில ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வேண்டும். சூப்பர்-கம்ப்யூட்டர் என்கிற வார்த்தையை முதன் முதலாகப் பயன்படுத்தியது எப்போது தெரியுமா? ஒரு நிமிடம் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள் – 1929ஆம் ஆண்டு நியு-யார்க்-வேல்டு என்கிறப் பத்திரிகையில் தான்.
சூப்பர்-கம்ப்யூட்டர் என்பது ஒரு நாட்டின் விஞ்ஞானப் பெருமையைப் பறைசாட்டுவது மட்டும் அல்ல, அது நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதும்கூட தான். நாம் மேலே கூறிய பயன்கள் போக சூப்பர்-கம்ப்யூட்டர் இன்று பூமியிலுருக்கும் எண்ணெய் வளங்களைக் கணக்கிட்டு கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது. அணு ஆராய்ச்சி என்பது போக்ரானில் நாம் வெடிக்கவைத்து பரிசோதித்தது போல செய்வது மட்டும் அல்ல, தற்போது அது போன்ற ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் தேவையானது சூப்பர்-கம்ப்யூட்டர். பங்குச் சந்தையிலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் கூட பயன்படுத்தபடுகிறது சூப்பர்-கம்ப்யூட்டர், அதற்கு உதாரணம் சொல்கிறது நியு-யார்க்-டைம்ஸ் நாளிதழ் – நமக்கு மிகவும் தெரிந்த ”விக்ஸ்”ஸை தயாரிக்கும் பி-அண்டு-ஜி நிறுவனம் தனது “பிருங்கள்” என்கிற உருளைக்கிழங்கு வருவல் உடையாமல் டப்பாவில் அடைக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க ஒரு சூப்பர்-கம்ப்யூட்டரைத் தான் பயன்படுத்துகிறார்கள் என்று.
எதற்கு இதை எல்லாம் இப்போது பார்க்கிறோம் என்று யோசிக்கிறீர்களா? ஆரம்ப காலம் முதலே சூப்பர்-கம்ப்யூட்டர் உலகில் கோளோச்சி இருந்த ஆமெரிக்காவைப் போன மாதம் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை சீனா பிடித்திருப்பதனால் தான். அக்டோபர் கடைசி வாரத்தில் சீனாவின் பாதுகாப்புத் துறையின் கீழியிருக்கும் தேசிய சூப்பர்-கம்ப்யூட்டர் கூடம் என்கிற அமைப்பு “தியந்-ஹி1ஏ” என்கிற சூப்பர்-கம்ப்யூட்டரைப் பற்றி தனது வெளியிட்டை அறிவித்தது. இது தான் உலகத்தில் இப்போது இருக்கும் சில நூறு சூப்பர்-கம்ப்யூட்டர்களிலேயே வேகமானது, இதன் எடை மட்டுமே 155டன். நூற்றுமுப்பதிற்கும் மேற்பட்ட காபினெட்களினுள் (ஒவ்வொன்றும் நம்மூர் காத்ரேஜ் பீரோ போல இருக்கும்) அடைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த இடத்திலிருந்த அமெரிக்கவின் டென்னஸ்ஸீயில் இருந்ததைவிட இது ஒன்றரை-மடங்கு அதிக திறன் கொண்டது. “தியந்-ஹி1ஏ” என்றால் பால்-வெளி அல்லது வானத்திலிருக்கும் ஆறு என்று பொருளாம்.
ஏதோ இந்த சாதனையை அதிர்ஷடவமாக தான் சீனா செய்துவிட்டது என்றோ இதில் எந்த அளவு உண்மை இருக்குமோ என்றெல்லாம் எண்ண வேண்டாம். அமெரிக்காவின் “தி-வீக்” என்கிற முக்கிய பத்திரிகையே இது ஒரு முறை செய்யப்பட்ட சாதனை அல்ல, இது சீனாவின் பல ஆண்டுக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தின் முதல் வெற்றி என்கிறது. இதற்கு முன் முதல் இடத்தில் டென்னஸ்ஸீ சூப்பர்-கம்ப்யூட்டரை இயக்கும் ஒரு விஞ்ஞானியான திரு.ஜாக்-டொங்குரா என்பவர் சொல்லியுள்ளார் ’அமெரிக்கா விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது’ என்று.
கணினி உலகம் இப்போது ஒரு கணினியின் திறன், அதன் தனியான பயன்பாடு என்கிற மாதிரியில் இருந்து பல ஆயிரம் கணினிகளின் கூட்டுத்திறன் என்கிற முறைக்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த அடிப்படையில் கூட சீனாவின் இந்த சாதனை முக்கியமானது, ஏன் என்றால் இந்த “தியந்-ஹி1ஏ” சூப்பர்-கம்ப்யூட்டர்க் கூட பல ஆயிரம் (எண்ணிக்கையில் 2100) பிராசசர்களை (சில்லு செயலகம்) ஒன்றிணைத்து செயலப்பட வைக்கப்பட்டது தான். தனிப்பட்ட இந்த பிராசசர்கள் அமெரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்டது என்றாலும் ஒருங்கிணைப்பைச் செய்வது சீனர்கள் தாமாகவே தயாரித்த “ஆர்ச்” என்கிற ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம் தான்.
கணினி துறையில் எல்லாவற்றையும் போல எது சூப்பர்-கம்ப்யூட்டர் என்பதும் மாறிக் கொண்டே இருக்கும். முதல் இடம் சில மாதங்களிலேயே முந்தப்படும். 1990-களில் வேகமான சூப்பர்-கம்ப்யூட்டர் எது என்கிற பட்டியலில் அமெரிக்காவைப் பின்னுக்கு தள்ளிய ஜப்பானிடம் இருந்து 2004-ஆம் ஆண்டு அந்த இடத்தை அமெரிக்கா திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலுமோர் ஒரு உதாரணம், 1997-ல் செஸ் உலக சாம்பியன் காரி-காஸ்பராவ்வை வென்ற ஐ-பி-எம் நிறுவனத்தின் “டீப்-புளூ” என்கிற சிறப்பு சூப்பர்-கம்ப்யூட்டரைவிட இன்று அலுவலகத்தில் இருக்கும் உங்கள் மேஜை-கணினியின் திறன் ஐந்திலிருந்து பத்து மடங்காவது அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சூன் 2010 வரையிலானக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பதினேழு சூப்பர்-கம்ப்யூட்டர்கள் இருக்கிறது. சென்னையிலும், பூனேவிலும் தான் அதிகமானதாக ஒவ்வொரு நகரத்திலும் நான்கு உள்ளது. உலக நூறு சூப்பர்-கம்ப்யூட்டர்கள் பட்டியலில் 33-ஆவது இடத்தில் தான் இந்தியாவின் டாடா சன்ஸ் “சி.ஆர்.எல்” என்கிற ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கும் சூப்பர்-கம்ப்யூட்டர் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பதினேழு சூப்பர்-கம்ப்யூட்டர்களின் கூட்டு திறனைப் போல எட்டு மடங்கு அதிக திறன் கொண்டது சீனாவின் “தியந்-ஹி1ஏ” என்கிற அந்த ஒரே ஒரு சூப்பர்-கம்ப்யூட்டர் என்றால் நாம் செல்லவேண்டிய தூரம் எவ்வளவு என்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தற்போது இந்த சாதனை செய்துள்ள சீனா கடந்த 2003-ஆல் உலகப் பட்டியலில் ஐம்பொத்தொன்றாம் இடத்தில் தான் இருந்தது என்று நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
கடந்த சூன் மாதம் மிகச் சிறப்பாக நடந்த தமிழ் இணைய மாநாடு 2010க்கு உழைத்த அரசு குழுவில் இருந்த அனைவருக்கும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களால் ஒரு மாலை விருந்து கடந்த மாதம் (செப்டம்பர் 28) கொடுக்கப்பட்டது. பணியாற்றிய அனைவருக்கும் ஒரு நினைவுப் பரிசும் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியின் படங்கள் கீழே:
(மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள், மற்றும் தமிழக அரசின் தகவல் தொடர்புத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.சந்தோஷ் பாபு)

|